: 11

நெருக்கடிகள் உணரப்படுகின்றன.

மொழியைப் பற்றிய ஆய்வில் முன்னோடிப் பார்வை தமிழுக்கு உண்டு. ஒலியே எழுத்து என்பதில் தொடங்கி சொல்லின் முதலெழுத்துகளாக இருக்கக்கூடியன; இறுதியில் நிற்கக்கூடியன என்பது தொடங்கி இரண்டு சொற்கள் இணைந்து உருவாகும் சொற்றொடர், சொற்றொடர்களின் வகைகள் என விரிந்து இலக்கியமாக/ செய்யுளாக ஆகும் விதம் பற்றிய பார்வையை முன்னோடி இலக்கணிகள் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பின்னோடிகளான உரையாசிரியர்களும் பாடம் சொல்லியவர்களும் முதன்மை நோக்கங்களை விட்டு விலகியதின் விளைவாக மொழி, இலக்கியக் கல்விக்கான பாடத்திட்டங்களும் கற்கை முறைகளும் அதற்கான அடிப்படை நூல்களும், மேல்விளக்க நூல்களும் தரவுகளைத் தேடும் முறைகளும், தரவுகளைப் படைப்புகளாக்கும் பயணத்திற்கு நகர்த்தும் பாதைகளும் இல்லாமல் தவிக்கின்றது மொழி இலக்கியக்கல்வி.

ஆழங்கால் பட்ட படிப்புகளிலிருந்து பொதுமைப் படுத்தப்பட்ட கல்வியில் பண்பாட்டுக் கல்வியின் இடம் என்ன? என்பது புரியாமல் தவிக்கிறது கல்வியுலகம். பண்பாட்டுக் கல்வியை நோக்கி நகரவேண்டிய மொழிக் கல்வியும் இலக்கியக்கல்வியும் வெற்றுச் சுமைகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படும் நிலையும் உருவாகிவிட்டது. வெற்றுச் சுமைகளை எந்த மனிதர்களும் நீண்ட நாட்கள் தூக்கிச் சுமக்க மாட்டார்கள். சொந்தப் பெற்றோர்களையே முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் சூழலில் தாய்மொழிக்கல்வியும் தந்தையின் இடத்தில் இருக்கும் இலக்கியக் கல்வியும் எந்த இடத்தில் இருக்கப்போகிறது? அச்சமாகவே இருக்கிறது.

தொழில் நுட்பக் கல்வியே இனி எங்கும் என்ற அச்சம் கால் நூற்றாண்டுக்கு முன்பு கல்விப்புலங்களைப் பேயாய் ஆட்டிப்பார்த்தது. இந்தியாவில்/ தமிழகத்தில் இந்த அச்சத்தை உணர்ந்தவர்கள் விழிப்படைகிறார்கள். சில தனியார்/ தன்னாட்சிகல்லூரிகள் வழி       காட்டுகின்றன தங்கள் அளவில் பொறுப்புணர்ந்து செயல்படலாம் என்ற நிலைக்கு வருகிறார்கள். அடிப்படை அறிவியல் துறைகள் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டு வருகின்றன. சமூகவியல் புலங்கள் அதனை உணரவில்லை.மொழி, இலக்கியத்துறைகளுக்கும் மாற்றம் வேண்டும் என்ற நெருக்கடி பரவத் தொடங்கியிருக்கிறது.

கோவை பூ சா கோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு மட்டும் - 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட பெரிய துறை- விரிவான ஒரு பயிலரங்கு நடத்த வேண்டும் என அத்துறையின் இளம் ஆசிரியர்கள் தந்த வேண்டுகோளை ஏற்று, கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்த பயிலரங்கை நேற்று நடத்தினேன். மொழிக்கல்வி, இலக்கியக்கல்வி, ஆய்வு நோக்கிய பார்வைகள் என்ற மூன்று பகுதிகள் கொண்ட பயிலரங்கில் ஆசிரியர்களின் ஆர்வமும் பங்கேற்பும் நம்பிக்கை ஊட்டியது. வாரக்கடைசி நாளான வெள்ளிக்கிழமையில் மாலை 5.30 வரை இருந்து கவனித்துக் குறிப்புகள் எடுத்ததோடு படங்களும் எடுத்துக்கொண்டார்கள். 
இதனை எல்லாம் ஒரு வார காலத்தில் ஒரு உறைவிடப் பயிலரங்காக நடத்தவேண்டும் என அவர்களே சொன்னார்கள். நெருக்கடிகள் தரும் அச்சம் வெளிச்சத்தைத் தேடவே செய்யும்

Image may contain: 1 person, smiling, sitting


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை