: 14

நடப்பியல் சினிமாக்காரர் மகேந்திரன்:

அவர் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். நான் அப்போது படித்துக்கொண்டிருந்த மாணவன். 40 ஆண்டுகளுக்கு முன்பு .. கல்லூரிக்குள் நுழைந்து நேராக வந்தால் இடது பக்கம் இருக்கும்.சிவாஜி கணேசன் திறந்து வைத்த கலையரங்கத்தில் தொடங்கி டேனியல் போர் நூலகம் தாண்டி, மணிக்கூண்டு முன்னால் நின்று பழைய நினைவுகளுக்குள் நுழைந்தார். விடுதிகளுக்கு முன்னால் செல்லும் சாலையில் திரும்பி பிங்காம்டன் ஹால் முற்றமேடைக்கு வந்து மெயின் ஹால் அரங்கில் நுழைந்தார். கல்லூரி வளாகத்தில் அங்கங்கே நின்று பேசிக்கொண்டே போனார். நானும் உடன் போய்க் கொண்டே இருந்தேன். அவர் காலத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லி இப்போதும் அதுபோல் நடக்கிறதா? என்று கேட்டார். எங்கள் ஆசிரியர் ஒருவர் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டே போனார். ஆங்கில இலக்கியம் படித்த அவர் அப்போதே நடக்கும் நாடகங்கள் பற்றியும் பிலிம் கிளப் பற்றியும் பேசினார். அங்கு கற்றுக்கொண்ட இலக்கியப்பார்வையே பின்னர் சினிமாவை நோக்கி நகர்த்தியதாகவும் சொன்னார். 

ஆங்கில இலக்கியத்தில் கற்றுத்தரப்படும் நாடகங்களும் நாடகங்கள் குறித்த அடிப்படை அறிவும் எதனையும் காட்சிகளாகவும் அங்கங்களாகவும் பிரித்துப் பார்க்கும் அறிவையும், ஒவ்வொன்றிலும் உணர்வு ததும்பும் உரையாடல்களால் நிரப்ப வேண்டியது குறித்தும் இலக்கியத்தையும் சினிமாவையும் இணைத்து இணைத்துச் சொன்னார்.

அந்த உரையை நிகழ்த்தும்போதே அவருடைய முக்கியமான சினிமாவாக்களான முள்ளும் மலரும், உதிரிப்பூக்களும் வந்திருந்தன.அதற்கும் முன்னால் தங்கப்பதக்கம் வாழ்வு என் பக்கம், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற படங்களின் திரைக்கதை வசனகர்த்தா.அதற்கும் முன்பு ஒரு டஜன் படங்களுக்குக் கதை எழுதிய கதாசிரியர். என்றாலும் முள்ளும் மலரும் தான் அவரை புதிய அலை சினிமாக்காரராகக் காட்டியது. அண்ணன் - தங்கை பாசம் என்னும் குடும்ப உறவுக்கதைக்குத் தமிழில் எப்போதும் பெரிய இடமுண்டு என்றாலும் முள்ளும் மலரும் அதையும் தாண்டிக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நடிப்பால் நிரப்பும் நடிகைகளையும் நடிகர்களையும் முன் வைத்தது. ரஜினிகாந்த், ஷோபா, ஜெயலட்சுமி (படாபட்) சரத்பாபு என ஒவ்வொருவரிடமும் நடிப்பைக் கொண்டுவரச்செய்தார். நடப்பியல் நடப்புக்கு மாற முடியாத ரஜினிகாந்தைக் கோபக்கார அண்ணனாக வார்த்துக் காட்டினார்.

முள்ளும் மலருக்குப் பிறகு நடிப்புப்பாடம் நடத்தும் இயக்குநராக மாறி ஒவ்வொருவரையும் திறமையான நடிகைகளாகவும் நடிகர்களாகவும் மாற்றினார். ரஜினியைப் பாசமும் கோபமும் கொண்ட அண்ணனாக மாற்றி நடிக்க வைத்தார் மகேந்திரன். பாரதிராஜாவின் படங்களிலும் பாலுச்சந்தரின் படங்களிலும் அழகுப் பொம்மைகளாகவும் சிலவகையான முகந்திருப்புதலுக்கும் பழக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, ராதிகா, ரேவதி, சுகாசினி, தீபா போன்றவர்கள் மகேந்திரனிடம் நடிக்கக் கற்றுக்கொண்டார்கள். மெட்டியில் விஜயகுமாரி, உதிரிப்பூக்களில் அஸ்வினி போன்ற நடிகைகளின் நடிப்பைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியும்.

அவர் இயக்கிய எல்லாப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.கதை, வசனம், நடிப்பு எனப் பல நிலைகளில் சினிமாவில் அவரது பங்களிப்பு உண்டு. என்றாலும் அவரது இயக்கத்தில் வந்த ஒவ்வொரு படங்களும் - முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, அழகிய கண்ணே, கைகொடுக்கும் கை, ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் - வணிக சினிமா என்னும் ஒற்றைப் பரிமாணத்தைக் கலைத்துப் போட்ட நவீனத்துவ சினிமாக்கள். கதைசொல்லிய முறை, காட்சித்துண்டுகள், அவற்றிற்கான இடப்பின்னணிகள், பின்னணி இசை, தேவையான இடங்களில் மட்டுமே பாடல்கள் என ஒவ்வொன்றையும் கவனத்துடன் செய்தவர். படப்பிடிப்புக்குப் போவதற்கு முன்பு எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு - இயக்குநர் படியைத் தயாரித்துக் கொண்டு படப்பிடிப்புக்குச் செல்வதாகப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்போதும் நல்ல நடிப்பைத் தரவிரும்பும் ஒரு நடிகையோ, நடிகரோ மகேந்திரனின் பாத்திர உருவாக்கத்தையும் அதற்குரிய நடிகைகள் தேர்வையும் அவர்களிடம் அவர் வாங்கியிருக்கக் கூடிய வேலையையும் கவனித்துக் கற்றுக்கொள்ள முடியும். புதுச்சேரியில் நடிப்புக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த காலத்தில் இதனை மாணாக்கர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

Image may contain: 1 person
Image may contain: 2 people, including Bhaskar Sakthi


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை