: 26

தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப்பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன்.

காதல் நட்பு, தோழமை போன்ற சொற்களெல்லாம் அருகருகே வைத்துப் பேசப்பட்டாலும் காதல் பங்கேற்கும் பாத்திரங்கள் வழியாகத் தனி அடையாளத்தையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொண்ட சொல். நட்பு, தோழமை என்ற இரண்டும் சமத்துவத்தையும் இணை நிலையையும் கோரும் சொற்கள். அதனை நிலைநாட்ட முயலும் சொற்களும்கூட. ஆனால் காதல் அப்படியான ஒன்றல்ல. இணைநிலையையும் சமநிலையையும் மறுதலித்து மேலான ஒன்றின் ஆதிக்கத்திற்காகவும் இன்னொன்றின் ஏற்புக்காகவும் தவிப்பையும் வலியையும் சொல்லும் சொல். ஆண் இன்னோர் ஆணோடும், பெண் இன்னொரு பெண்ணோடும் நட்புகொள்ள முடியும்; தோழமையாகவும் இருக்கமுடியும். ஆனால் காதல் கொள்ளவும் காதலர்களாக அடையாளப்படுத்தவும் ஆண் – பெண் எதிர்பாலினர்கள் தேவை. இதனை மறுப்பவர்கள் காதலை ஒற்றைத் தளத்தைப் புரிந்து கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள்.

தடயத்தின் விவாதம்

தமயந்தியின் தடயம், காதலை ஒற்றைத் தளத்தில் விவாதிக்காமல் அதன் அனைத்துத் தளங்களையும் பார்வையாளர்களுக்கு முன்வைக்க முயன்றுள்ளது. வணிக வெற்றிப்படங்களில் காட்டப்படுவதுபோல ஒரு தற்செயல் சந்திப்பில் உருவான ஒன்றாக இல்லை அவ்விருவரின் காதல். அருகருகே இருந்த வீடுகளில் குழந்தைகளாக இருந்த காலத்தில்- ஆண்/பெண் என்ற பேதங்களுக்குப் பின்னிருக்கும் உடல் மற்றும் மன உணர்வுகளை அறியாத காலத்தில் உருவான நட்பான அறிமுகம் அவர்களுடையது. உடல் வளர்ச்சியும் அதனால் உண்டாகும் மனத்தூண்டலும் வளர்ந்த காலத்தில் நட்பு காதலாக மாறியிருக்கிறது. ஆனால் காதலித்த இருவரும் இணைந்து அதனைக் குடும்பம் என்னும் அமைப்பாக மாற்றாமல் காதலாகவே தொடர்கிறார்கள். அப்படித் தொடர்வதில் இருக்கக் கூடிய அபத்தங்களையும் விருப்பங்களையும் விவாதிக்கிறது படம். காதலி, மனைவி, வைப்பாட்டி என்ற சொற்களின் பயன்பாடுகள் முழுக்க ஆணின் அடையாளத்தோடே இயங்கும்போது அவற்றிற்குப் பின்னே அன்பு, புனிதம், குற்றம் போன்றன இணைந்து அபத்தச் சூழல்களை உருவாக்குவதைக் காட்சிகளாக காட்டாமல், உரையாடல்களால் முன்வைக்கிறார் தமயந்தி. மொத்தப்படத்தின் விவாதமும் இதுதான்.

காதலித்த இருவரும் ஏன் பிரிந்தார்கள்? என்ற கேள்விக்குப் பின்னே அவர்களின் சுற்றுப்புறச் சமூகமோ, அதன் இறுக்கமான கட்டுப்பாடுகளோ, அதனால் உண்டாகக் கூடிய தடைகளோ இருந்தன என்பது போன்ற புறநிலைத் தகவல்களைப் படம் கொண்டிருக்கவில்லை. அதிகப்படியான உடைமைத் தன்மைகொண்ட அவளோடு தொடர்ந்து வாழ முடியுமா? என்ற கேள்வி அவனுக்கு இருந்தாலும், அவர்களுக்குள் ஒத்துவராத தன்மை இருக்கிறது என்பதாக நினைத்து, விவாதித்து முடிவெடுத்துப் பிரிந்தவள் அவள்தான். அந்தப் பிரிவுக்குப் பின் ஏற்படுத்திய குற்றவுணர்வு அவளுக்குள் இருக்கிறது.ஆனால் அவனுக்கு இல்லை. அதனாலேயே அவளது துயரம் மிகுந்த இப்போதைய இருப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல் பார்க்க வருகிறான். நோயின் பிடியிலிருக்கும் தனது காதலியைத் திரும்பவும் தன்னுடன் வைத்துக்கொள்ளவும் தயாராகிறான். 

இயக்குநராகத் தமயந்தியின் புரிதல்கள்

காதலியைச் சந்திக்க வருவதும், உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனச் சொல்லுவதான சந்திப்பே படம். அந்தச் சந்திப்பு நிகழும் அந்த நாள் ஒரு மழைநாளாக இருந்தது எனப் படத்திற்கான பின்னணியை உருவாக்கிக் கொண்டு படமாக்கியிருக்கிறார் தமயந்தி. ‘உன்னைச் சந்திக்க வருவேன்’ எனச் சொல்லிய நாளில் தவறாமல் போய்விட வேண்டும் என்ற தவிப்பும், அதற்கான பயணமுமாகத் தொடங்கும் காட்சிகளுக்கு மழை வரப்போகிறது என்ற அறிகுறிகள் புதிய அர்த்தங்களைத் தருகிறது.

தயங்கித் தயங்கி அவன் வந்துகொண்டிருக்கிறான். அந்தத் தயக்கத்திற்குப் பின்னால் பல பழைய நினைவுகள் இருக்கின்றன. அவை எவையும் காட்சிப்படுத்தப்படவில்லை. அவனைச் சந்திக்கவும் நீண்ட நாள் பிரிவுக்குப் பின் இப்போதைய நோய்வாய்ப்பெற்ற தன் உடம்பை, அதற்குள் இருக்கும் மனதை எப்படித் தரமுடியும் என்ற தவிப்போடு அவள் படுக்கையில் கிடைக்கிறாள். அவளுக்கு உதவியாக இருக்கும் பெண்ணை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறாள். அந்தக் காத்திருப்பிற்கான பழைய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கலாம். அதைச் செய்யவில்லை. முன் நிகழ்வுகள் எதனையும் காட்சிப்படுத்திவிடக் கூடாது என்ற திட்டமிடலில் தேர்ந்த இயக்குநரின் திட்டமிடல் வெளிப்படுகிறது. அப்படித் தவிர்த்துக் கொண்டே வந்தவர் சந்திப்புக்குப் பின் அவர்களிருவரின் காதல் இன்னும் இன்னுமாய்த் தொடரப்போகிறது என்ற நிலையில் பழைய நாட்களை மகிழ்ச்சியான இசைக்கோலங்களோடும் வரிகளோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். நிறைவேறாக் காதலின் துயர முடிவைக் காட்டி துன்பியல் படம் பார்த்த உணர்வோடு பார்வையாளர்களை வெளித்தள்ளிவிடுவாரோ என்று எதிர்பார்த்த நிலையை மாற்றித் தொடரும் காதலின் களிப்பாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கியிருக்கிறார். அதற்கான வெளியாக அந்த தோட்டமும், குளக்கரையும் மரக்கிளைகளின் வளைவுகளும் அதனோடு அவர்கள் நகர்வுகளுமாகப் படப்பிடிப்பைச் செய்திருப்பதிலும் ஓர் எளிய அழகியல் வெளிப்பட்டுள்ளது.

மழைநாளில் நடக்கும் அந்தச் சந்திப்பும் உணர்வுகளின் பரிமாற்றமும் அதற்கு அந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல்மொழியும் குரலும் சேர்ந்து உண்டாக்கும் அழுத்தமான வெளிப்பாடும் பார்வையாளர்களைக் காட்சிகளோடு பொருத்திவிடும் வல்லமை இருக்கிறது; அதைக் கொண்டுவரவேண்டும் என்ற நம்பிக்கையோடு தமயந்தியின் இயக்கம் இருக்கிறது. அவருடைய நம்பிக்கைக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படுத்தாமல் இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்ற நடிகையும் நடிகரும் உதவியிருக்கிறார்கள். ஓர் இயக்குநராகத் தமயந்தி தனது திரைக்கதையை உருவாக்கி, அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிக, நடிகையரைத் தேர்வு செய்த நிலையில் அவர்களிடமிருந்து நடிப்பைத் தேவையான அளவுக்கு வாங்குவதற்கான ஒத்திகைகளையும் செய்திருப்பார் என்பதையே படத்தின் காட்சிகள் காட்டுகின்றன. அத்தோடு பின்னணி இசைச் சேர்ப்பும் இணைந்துகொள்ள ஒரு மணி நேரத்தில் ஒரு சிறுகதையிலிருந்து உருவான ஒரு படம் என்பதற்கு மாறாக முழுமையான படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.

மாற்றுச் சினிமாவின் தடைக்கற்கள்

எழுத்தில் வாசித்த தமயந்தியின் சிறுகதையை திரையில் பார்த்தபோது தமயந்தியின் ஊடகம் சினிமா என்பதாக உணரமுடிந்தது. திரைமொழியைக் கற்றுத்தேர்ந்து வெளிப்படுத்தியுள்ள தமயந்தியின் படத்தைப் பார்த்தவுடன் தமிழில் இதற்கு முன் சிலர் எழுத்தாளர்கள் செய்த முயற்சிகள் நினைவுக்கு வந்தன.சிறுகதையைத் திரைக்கதையாக்கிச் சினிமாவாகத் தந்ததில் தங்கர்பச்சானின் அழகிக்கு முக்கியமான இடமுண்டு. அந்தச் சினிமாவின் மூலக்கதை அவர் எழுதிய கல்வெட்டு. அந்தக் கதையைப் படித்தவர்களுக்குத் தெரியும் எழுத்து மொழியைவிடச் சினிமாவின் மொழியின் வலிமையானது என்பது. அவரைப் போலவே தனது எழுத்து மொழியைவிடவும் கூடுதலான சினிமா மொழியைக் கையாளும் பக்குவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. ஆனால் அந்தப் படம் அடைந்த வணிக வெற்றியையும் திரையிடல்களையும் இந்தப் படம் பெறவில்லை. 
எப்போதும் நான் எழுத நினைக்கும் படங்களைப் பெரும்பாலும் பெரிய திரையில் பார்வையாளர்களோடு அமர்ந்து பார்த்துவிடுவது வழக்கம். திருநெல்வேலி போன்ற நகரங்களில் மைய நீரோட்டச் சினிமாக்களை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும். வணிகரீதியான பெரும்பணத்தை தயாரிப்பிலும் விளம்பரத்திலும் முதலீடு செய்து திரைக்குவரும் படங்கள் குறைந்தது வெளியாகும் வெள்ளிக்கிழமையைத் தாண்டி அடுத்துவரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலாவது திரையரங்கில் பார்க்கக் கிடைக்கும். திருநெல்வேலியில் செழியனின் டூலெட் வந்த சுவடு தெரியாமலேயே போய்விட்டது. ஆனால் தமயந்தியின் தடயம் அவரது சொந்த முயற்சியின் விளைவாகத் தயாரிக்கப்பட்டது போல அவரது சொந்த முயற்சியின் வழியாகவே மாற்றுத் திரையரங்குகளிலேயே காணக்கிடைக்கிறது. 
வணிக சினிமாவிற்கு முதலீடு செய்யும் பெருவணிகர்கள் எல்லாவகையான சொல்லாடல்களுக்கும் தனது பணத்தை முதலீடு செய்வதில்லை. அவர்களின் வாழ்க்கைப் பார்வை, சமூக மாற்றம் குறித்த அக்கறை போன்றவற்றிற்கு எதிரானவைகளை ‘வெற்றியடையாது’ என்று சொல்லித் தடை செய்துவிடுவார்கள்.

நிறுவனமயமான தனி மனித ஒழுக்கம், கட்டுப்பட்டு நடத்தல், விதிமீறாமையை ஏற்றுப் போகும்போக்கு போன்றவற்றைத் தக்கவைக்கும் சினிமா முயற்சிகளுக்குக் கணக்கின்றிக் கொட்டிச் செலவழிப்பார்கள். அதே நேரத்தில் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தனிமனித விடுதலைக் கருத்தையோ, சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் சினிமாக்களையோ தடுக்கவே பார்ப்பார்கள். அந்த நிலையில் உள்ளடக்க ரீதியாகப் புதுமை செய்ய விரும்புபவர்கள் திரைமொழியிலும் படமாக்கும் விதத்திலும் மாற்றுகளைப் பற்றிச் சிந்திப்பதோடு, தயாரிப்பு, விளம்பரம், வெளியீடு போன்றவற்றிலும் மாற்றுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

தமிழில் மாற்றுச் சினிமா முயற்சிகள் என்பவை ஒற்றைத் தனமானவை அல்ல. ஆண் -பெண் உறவுசார்ந்த புதிய சொல்லாடல் ஒன்றைத் திரைப்படமாக்க வேண்டும் என நினைத்த தமயந்திக்கு வணிக சினிமாவின் முதலீடு கிடைக்காமல் போனது ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவள் அப்படித்தான் என்ற படத்தை இயக்கிய ருத்ரையாவின் நிலையும் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அவரது பட த்தில் நடிக்க கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா போன்ற நடிகர்கள் கிடைத்தார்கள். அதற்கு அவரோடு நட்பில் இருந்த பாலச்சந்தரின் உதவியாளர் அனந்து காரணமாக இருந்தார். தயாரிக்கப்பட்ட படத்தை வணிக வெற்றியடையச் செய்ய முடியாமல் வரலாற்றில் நின்ற படமாக மட்டுமே இப்போதும் அவள் அப்படித்தான் இருக்கிறது. அது ஒரு மைல் கல். அதுபோலத் தமிழ் மாற்றுச் சினிமா வரலாற்றில் சில மைல்கல்கள் உண்டு. ஏழாவது மனிதன், காணிநிலம் போன்ற படங்கள் பேசிய பொருண்மை காரணமாக மைல்கற்கள். பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்றன தயாரிக்கப்பட்ட முறையில் இன்னொரு பாதையின் மைல் கற்கள். இந்த மைல்கற்களை நட்டவர்கள் தமிழ்த்திரைப்படத் தொழிற்சாலைக்குள் தங்களின் அடையாளத்தோடு இயங்கியவர்கள். ஆனால் தமயந்தி அதற்குள் இயங்குகிறார் என்றாலும் சினிமாவில் முக்கியமான ஆளுமையாகத் தன்னை நிறுவிக்கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருப்பவர். அவரால் தடயம் போன்றதொரு படம் சாத்தியமாகியிருக்கிறது என்பதின் பின்னால் அவரது மனவலிமை இருக்கிறது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று

Image may contain: 1 person, food and indoor
Image may contain: 1 person, sitting, table and indoor


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை