: 26

நாடாளுமன்றம் செல்லவேண்டியவர் - 4/ ரவிக்குமார்

2019 நாடாளுமன்றத்தேர்தலில் விழுப்புரம் நாடாளு மன்றத்தொகுதிக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அத்தொகுதியின் வேட்பாளராக துரை.ரவிக்குமார் அவர்கள் அறிவிக்கப்பட்டு வாக்குச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார் பொதுமனப்போக்கை - வெகுமக்கள் உளவியல் செயல்படும் விதத்தை- உணர்ந்து கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லவேண்டும். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டியது விழுப்புரம் தொகுதி வாக்காளர்களின் பணி.

இப்படி நான் சொல்வதற்கு முதன்மையான காரணம் எனது நீண்ட கால நண்பர் என்பதுதான். ஆனால் எங்கள் நட்பு ஒரே தெருவில் விளையாண்டு, ஒரே பள்ளியில் படித்து, சொந்தக்காரங்களின் நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஒன்றாய்ப் போய்த் திரும்பிக் குடித்துக் களித்து வளர்ந்த நட்பல்ல. இலக்கியத்தில்- இலக்கியத்தைப் பற்றிய பார்வையில் தொடங்கி சமுதாயத்தை- அரசியலை-நிகழ்காலத்தின் இருப்பைப் புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் உருவான ஒத்த மனநிலையால் உண்டான நட்பு.

இந்தியாவில் ஜனநாயக அரசியலின் வெளிப்படையான வடிவங்கள் ஊராட்சி மன்றங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் என்னும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைப்புகள். இவற்றுக்கு உறுப்பினர்களாக வர வேண்டியவர்களின் பாதையைக் களத்திலிருந்து தொடங்கவேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது வாக்குச் சீட்டு அரசியல். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமாக, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசோடு கொள்ள வேண்டிய உறவுகளிலும் முரண்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உதவுவதின் மூலம் ஒரு தனிநபர் அரசியல் மனிதராக மாறுகிறார். மிகச்சிறிய அரசமைப்பான குடிமைப்பொருள் வழங்கும் கடையில் ஏற்படும் பிரச்சினைகளில் தொடங்கி, கூட்டுறவு அமைப்புகள், காவல் நிலையங்கள், வருவாய் அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் வரை மக்களின் கோரிக்கைகளும் தேவைகளும் இருக்கின்றன. இவையல்லாமல் அரசின் துணை அமைப்புகளான பள்ளிகள் தொடங்கிப் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வி நிலையங்கள், வங்கிகள், போக்குவரத்துக் கழகங்கள், நீதிமன்றங்கள் , சுகாதார நிலையங்கள் எனப் பல்வேறு அமைப்புகளோடு மக்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. இவ்வமைப்புகளின் பணியாளர்களும் அதிகாரிகளும் அவரவர்கள் செய்யவேண்டிய பணிகளை முறையாகச் செய்யாமல் தவறுகின்றனர்; பாரபட்சம் காட்டு கின்றனர்; கண்டு கொள்ளாமல் தவிர்க்கின்றனர். இந்த நிலையில் தான் அரசியல் மனிதரின் தேவை உருவாகிறது. அதில் ஈடுபட்டுத் தன்னை அரசியல்வாதி ஆக்கிக்கொள்கிறார்கள் இந்த அனுபவத்தை வெளிப்படையாகச் செய்பவர் நேரடியாக அரசியல்வாதி ஆகிறார்.

களப்பணியாளராக மட்டுமே இருக்கும் ஒருவருக்கும் இத்தகைய வாய்ப்புகள் அதிகம். அதனால் அவர்கள் அரசியலுக்காகப் பிறந்தவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். மக்களின் சார்பாளராகி நடைமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறார்கள். இந்தப் பாதையை எழுத்தாளர்களும் பின்பற்றலாம். ஆனால் அரசுத்துறையிலோ- அரசு சார்ந்த அமைப்புகளிலோ- சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இந்தப்பாதை தடுக்கப்படுகிறது. இந்தியாவில் பின்பற்றப்படும் பணிவிதிகள் அவர்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுக்கின்றன. அதையும் தாண்டி ரவிக்குமார் 
எழுத்தாளராகவும் செயலாளியாகவும் எப்படிச் செயல்பட்டார் என்பதை அவரது செயல்பாடுகள் வழியாக நேரடியாகப் பார்த்தவன் நான் . பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் விழுப்புரம், கடலூர் மாவட்டக் கிராமங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், தீண்டாமைக் கொடுமைகள் சார்ந்த புகார்களோடு ஒரு மக்கள் பிரதிநிதியின் வீட்டு வாசலில் நிற்பதுபோலக் களப்பணியாளர்கள் நிற்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தக்க ஆலோசனைகளையும் செயல்முறைகளையும் சொல்லி அனுப்புவார். அன்றே அவற்றைச் செய்தியாக்கி பத்திரிகைகள் வழியாக வெளிக் கொண்டுவருவார். உண்மை அறியும் குழுக்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்வார். அறைக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பல கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசச் செய்வார் அதிலும் குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அவர் செயல்படும் விதங்களைக் கூடவே சென்று பார்த்திருக்கிறேன். அப்போது அவர் ஒரு வங்கி ஊழியர்; நிறப்பிரிகையின் ஆசிரியர் மட்டுமே.

2006 இல் தேர்தலில் நிற்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சொன்னபோது தயக்கத்தில் இருந்த ரவிக்குமாரைத் தைரியமாக இறங்கி விடுங்கள் என்று சொன்னவர்களுள் நானும் ஒருவன். தேர்தலின்போது அவர் மக்களைச் சந்திக்கும் விதத்தையும், மக்கள் அவரை எதிர்கொண்ட முறைகளையும் உடனிருந்து பார்த்திருக்கிறேன். 2006 சட்டமன்றத்தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முன்பு ரவிக்குமார் ஓர் அரசுடைமை வங்கியின் ஊழியர்.அதே நேரத்தில் அவரை ஓர் எழுத்தாளராகவும் பண்பாட்டுச் செயலாளியாகவும் தமிழகம் அறியும். அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் புதுவைமையை மையமிட்டு உருவான கருத்தியல் தளங்களைக் கட்டமைத்து நிறப்பிரிகை. அதன் ஆசிரியர் குழுவில் அ.மார்க்ஸ், பொ. வேலுசாமி ஆகியோர் இருந்த போதிலும் ரவிக்குமாரின் பெயரே நிறப்பிரிகை என்னும் இதழோடு இணைத்து அறியப்பட்டது. அவரது முகவரியில் இருந்தே நிறப்பிரிகை வெளிவந்தது. அவ்விதழ் சார்ந்த கருத்தியல் தளங்களுக்கும் போராட்டக் களங்களுக்கும் அவர் தான் பொறுப்பு.

தொண்ணூறுகளில் தமிழ்ச் சிந்தனைத் தளத்தைச் சுழற்றியடித்த தலித் எழுச்சிப் போக்கின் தாக்கம் அரசியல், பண்பாடு, இலக்கியம், ஊடகச் செயல்பாடு, களப் போராட்டம் ஆகியன அந்தக் கால கட்டத்தையும் தாண்டி நகர்ந்ததின் பின்னணியில் ரவிக்குமாரே இருந்தார். அவர்தான் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற கருத்தியல்களைத் தமிழின் அறிவுப் பரப்பிற்குள் தொடர்ச்சியாக முன்வைத்தார். நுண் அரசியல் தளங்களுக்கும் அப்பால் பேரரசியல் தளங்களுக்கும் நகர்த்தும் நோக்கத்தோடு வெகுமக்கள் ஊடகங்களில் பணியாற்றுபவர்களோடு உறவுகளை ஏற்படுத்தினார். தமிழகத்தின் தலித் எழுச்சி, அரசியல் தளத்தில் ஏற்ற இறக்கங்களைப் பெற்று வந்தாலும் அதன் சிந்தனைத் தாக்கம் காத்திரமாகவே இருந்துவருகிறது.

கலை இலக்கியம், பண்பாடு, ஊடகம், விளையாட்டு, கேளிக்கைகள் என எல்லாவற்றிலும் தலித் சிந்தனையாளர்களின் கருத்து என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி யோசிக்க வேண்டிய நெருக்கடியை அது ஏற்படுத்திவிட்டது. அத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தியது தலித் இயக்கங்களின் களச் செயல்பாடுகளே என்றாலும் அதன் பின்னின்று இயக்குபவர்கள் அவ்வியக்கத்தின் சிந்தனையாளர்களே. தலித் இயக்கங்களுக்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கிச் செயல்பாட்டுத் தளத்துக்கு உருட்டிவிடும் பணியைக் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்து செய்து வருபவர் ரவிக்குமார். இதற்காக அவர் கொள்ளும் உறவுகளும் பழகும் மனிதர்களும் பல நேரங்களில் சந்தர்ப்பவாதமாகத் தோற்றம் அளிக்கும். ஆனால் அந்தத் தொடர்புகளையும் உறவுகளையும் பயன்படுத்தி அவர் யாருக்காக அரசியல் செய்ய வந்தாரோ அவர்களுக்குப் பயன் உண்டாக்கவே அதைச் செய்தார் என்பதை உணர்த்திவிடுவார்.

ஓர் எழுத்தாளராக அவர் எழுதிக்குவித்த கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும் மொழிபெயர்ப்புகளுமாக 50 நூல்களுக்கும் மேலாக இருக்கின்றன. தத்துவம், அரசியல், கலைக்கோட்பாடு என அவர் மொழிபெயர்த்தவைத் தமிழ்ச் சிந்தனை மரபில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கியவை.அதற்காகப் பல அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் அண்ணா விருது, எங்கள் பல்கலைக்கழகத்தின் திறனாய்வாளர் விருது, விடியல் அமைப்பின் விருது போன்றன முக்கியமானவை

ஐந்தாண்டுக் காலம் காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது எழுப்பிய கோரிக்கைகளும் கவனப்படுத்திய பிரச்சினைகளும் அதுவரையில் சட்டமன்ற உறுப்பினர்களால் நினைத்துப் பார்க்கப்படாதவை. அவரது முன்னெடுப்பால் உருவாக்கப்பட்ட நல வாரியங்கள் பற்பல. வீட்டுப்பணியாளர்களுக்கு, ஓமியோபதி மருத்துவர்களுக்கு,புதிரை வண்ணார்களுக்கு, நரிக்குறவர்களுக்கு, நாட்டுப் புறக்கலைஞர்களுக்கு...எனப்பலவற்றின் காரணி அவர்தான். ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப் பெற்ற உதவித்தொகையை அதிகப்படியாக்கியது அவரது பத்திரிகை எழுத்தும் சட்டமன்றப்பேச்சுமே ஆகும்.இவைபோலப் பலவற்றை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் வழிமுறையை அவர் அறிவார். குறிப்பாக மனித உரிமைகள் சார்ந்தும், பன்னாட்டு உறவுகள் சார்ந்தும், இந்தியச் சமூகத்தின் அடுக்குகளுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் இந்திய நாடாளு மன்றத்தில் பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் முன்னணிப் படையாகவும் தகவல் களஞ்சியமாகவும் அவர் விளங்குவார்.

ரவிக்குமாருக்கு படிப்பதும் எழுதுவதும் உண்பதை விடவும் தூங்குவதைவிடவும் அதிகமான விருப்பங்கள். தொடர்ச்சியான பயணங்கள், சந்திப்புகள், உரையாடல்கள் என்பனவற்றில் சலிப்பே இல்லாதவர். நிறப்பிரிகையை நின்றுபோன பின்பு அவர் பொறுப்பில் வந்த இதழ்கள் சில உண்டு. தொகுத்துப் பதிப்பித்த நூல்கள் பல உண்டு. தலித், போதி போன்றன இதழ்கள். . அரசியல்வாதியாக ஆனபின்பும் மணற்கேணி என்னும் ஆய்விதழைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தனது ஆய்வுப் பட்டத்திற்கான பணியை முடித்து முனைவர் பட்டம் பெற்றதும் கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையில் தான்.

விழுப்புரம் தொகுதியின் நிலவியல், பொருளியல் தரவுகளை வைத்துக்கொண்டே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அந்தத் தொகுதியின் முதன்மையான தேவைகளெவை என்பது இப்போதே தெரியும். தொழில் வளர்ச்சியற்ற - வேளாண்மையை நம்பியிருக்கும் மனிதர்களைக் கொண்ட விழுப்புரத்தின் மனித வளத்தைப் பயன்படுத்தும் பெருந்தொழில்களின் தேவையை எடுத்துச் சொல்லும் திறன் அவருக்குண்டு.

பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பெற்ற அனுபவத்தோடு, வழக்குரைஞராகவும் மனித உரிமைச் செயல்பாட்டாளராகவும் அவர் பெற்ற அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பார் என்பதை உறுதிசெய்யக்கூடியன. அந்த அறிவார்ந்த ஒருவரைத் தங்களின் பிரதிநிதியாக அனுப்பும் வாய்ப்பை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் பெற இருக்கிறார்கள். அந்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

Image may contain: 1 person
Image may contain: 5 people, including Raja Sundararajan, people smiling


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை