: 13

இது தனிநபர் வீழ்ச்சி மட்டுமல்ல

மூத்த பத்திரிகையாளர்; நல்ல சிறுகதைகள் எழுதியவர் என்ற அடையாளத்தோடு நடுநிலையாகச் சிந்திப்பவர் என்ற அடையாளத்தைப் பேணிவந்த மாலன், நேற்று எழுதிய ஒரு பதிவில் தனது பா.ஜ.க. ஆதரவை அப்பட்டமாகக் காட்டிவிட்டார் என அவர்மீது மரியாதைகொண்ட பலரும் புலம்பியிருந்தார்கள். நான் அவரது பதிவை நேரடியாக வாசிக்கவில்லை.

அவரால் பட்டியல் நீக்கம் செய்யப்பட்டவன் நான். எங்கள் பல்கலைக்கழகத்தில் நான் நடத்திய கருத்தரங்கம் ஒன்றைக் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்குச் சொன்ன பதிலை முன்னிட்டு என்னை நட்பு நீக்கம் செய்தார். அவர் நடத்தும் நிகழ்வுகளும் எழுதும் இலக்கியங்களும் அர்த்தம் கொண்டவை; தீவிரமானவை; மற்றவர்கள் செய்வன அர்த்தமற்றவை என்பதே அவரது வாதமாக இருந்தது. இது நடந்தது நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால். என்றாலும் அதற்குப் பின்னால் அவரும் நானும் சில இலக்கிய/ பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறோம்; புன்னகை செய்திருக்கிறோம். நலம் விசாரிக்கவே செய்திருக்கிறோம்.

மோடி அரசின் ஆதரவு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பைக் கொண்டு திரும்பவும் அவரே ஆட்சிக்கு வருவார். அதனால் அதிகாரத்துக்கு வருபவரை - வெல்லப்போகின்றவரை ஆதரிப்பதே புத்திசாலித்தனம். தோற்றவரை ஆதரிப்பதின் மூலம் எதிர்ப்பரசியல் தான் செய்யமுடியும். அதனால் தமிழகத்திற்கு நன்மை இல்லை; தீமையே விளையும் என்று மாலன் தனது ஆதரவைக் காட்டுவதும், தன்னையொத்தவர்களின் வாக்குத்திரட்சியை மடைமாற்றம் செய்வதும் ஆச்சரியமானதல்ல. அவர் எப்போதும் சார்புநிலை கொண்டவர்தான். அவர் மட்டுமல்ல இங்கே யாரும் சார்புநிலை இல்லாமல் இருக்க இயலாது என்பதும் உண்மை. ஆனால் ஒருவரின் பொதுவெளிச் சார்பு அதிகாரத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டதாக இருக்கும்போது அச்சார்பு ஆபத்தானது என்பது உறுதியாகும்.

மாலன் எழுதிய புனைவுகளில் இருக்கும் தன்னிலை பெரும்பாலும் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானமும் உருவாக்கிய தன்னிலை. அதே நேரத்தில் அவரது பெயர் பொறித்து வந்த கணையாழி, தினமணி, சன் நெட்வொர்க், புதிய தலைமுறை என பணியிடங்களில் வெளிப்பட்ட தன்னிலை வேறானது. அந்நிறுவன விதிகளையும் அரசியல் நோக்கங்களையும் மறைமுகச் சார்புகளையும் அறிந்து நிறைவேற்றும் பணியிடப் பொறுப்பை உணர்ந்தது. சாகித்திய அகாடெமி போன்ற அரசு சார்ந்த இலக்கிய, பண்பாட்டு நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் போன்றவற்றிற்கு நேர்மையான வழிகளையே பின்பற்றினார் என்று நம்பவேண்டியதில்லை. அவர் எழுதியதின் காரணமாகவே உறுப்பினர் ஆனார் என்றால் மைலாப்பூரில் இருக்கும் அவரது நண்பர்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அவருக்குக் கிடைக்கும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களும் கூட அப்படியான கேள்விக்குட் பட்டவையே. எல்லா நேரங்களிலும் எல்லா அமைப்புகளிலும் அதிகார மையத்தை - அதன் தலைமையை அனுசரித்துப் போகும் வாய்ப்பையே கைக்கொண்டவர் அவர். இந்த மனநிலை நடுத்தரவர்க்க - குமாஸ்தா மனநிலை. மாலன் அப்படித்தான் இருக்கிறார்; வெளிப்படுகிறார்.

அவரது வாழ்க்கைச் சூழல் அப்படித்தான் கட்டமைக்கிறது. ஒரு மாதச் சம்பளக்காரர் வீட்டில் ஒருவராகவும் வேலைபார்க்கும் இடத்தில் இன்னொருவராகவும் இருக்கவேண்டிய- நடிக்கவேண்டிய பாவனைகள் உண்டு. அதனைச் செய்யும்படி வலியுறுத்துவது அமைப்பின் விதிகள். வீட்டில் ஆணாதிக்க வாதியாகவும் மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போகும் ஒருவர் அதே மனநிலையை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் காட்ட முடியாது. அப்படிக் காட்டினால் தண்டனை கிடைக்கும். இந்தியாவில் ஒவ்வொருவரும் அந்தரங்க வெளியில் ஒருவராகவும் பொதுவெளியில் இன்னொருவராகவும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இம்மனநிலைக்கு இங்கே படித்துச் சூதும் வாதும் செய்யும் ஒவ்வொருவரும் விலக்கானவர்கள் அல்ல. அதனால் எந்த அமைப்பிலும் இணைந்து வேலைசெய்ய மாட்டேன் என்று தீவிர எழுத்தாளர்கள் தான் தோன்றியாக அலைகின்றார்கள். அமைப்புகளின் விதிகளுக்கு உடன்படாத கலகக்காரர்களாக - அனார்க்கிஸ்டுகளாக இருக்கிறார்கள். சித்தர் மரபும் தனிப்பாடல்கள் பாடிய காளமேகம் போன்ற ஒன்றிரண்டு புலவர்களும் கலகமனத்தை எழுதிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நவீனத்துவம் நுழைந்தபின்பு பாரதியிடமும் பிரமிளிடமும் ஜி.நாகராஜனிடமும், விக்கிரமாதித்தியனிடமும் ஓர் அலைவு மனத்தைக் காண்கிறோம். அமைப்பில் செயல்படுவதில் ஆர்வமற்றவர்களாய் - செயல்பட நேர்ந்தாலும் அதன் நடைமுறைகளுக்கு ஒத்துப் போகும் விருப்பம் இல்லாதவர்களாய் வெளியேறியிருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளாக இப்போது எந்த எழுத்தாளரையும் சுட்டிக்காட்ட முடியாது. சித்தர்களின் மரபில் சொல்லத்தக்க நவீன எழுத்தாளன் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையல்ல. ஏனென்றால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் பலமான அமைப்புகளாகக் குடும்பமும் சாதியும் இருக்கின்றன. 
இங்கே ஒருவரின் அந்தரங்க வெளியைத் தீர்மானிப்பதில் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானங்களும் முக்கியப் பங்காற்று கின்றன.இவ்விரண்டும் நம்பிக்கைகளின் மேல் இயங்கும் அமைப்புகள். அதனை மீறினால் தண்டனைகள் கிடைக்கும் என்றில்லை. ஆனால் பொதுவெளி நடவடிக்கைகளை அவர் பணியாற்றும் அமைப்பின் சட்டவிதிகள் தீர்மானிக்கின்றன. அதிலிருந்து மீறினால் தண்டனை கிடைக்கும் வாய்ப்புண்டு.

இந்தத் தேர்தல் ஒவ்வொருவரையும் சாதிக்குள் சிந்திப்பவராகக் காட்டிவிட்டது. ரகசியங்களை வெளிப்படையாக்கி விட்டது. எழுத்தாளர்கள் - நவீனத்துவத்தை உள்வாங்கிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் சாதியாகவே வெளிப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பிராமணர்களை- எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் அறிவுஜீவிகளாகவும் வேடம் கட்டிய பிராமணர்கள் ஒவ்வொருவரையும் அதைத் தாண்டிச் சிந்திக்கவிடாமல் குறுக்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் - மோடியின் அரசாங்கம் - பிராமணியத்தைக் காக்கும் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனால் அதனைக் காக்கும் வேலையும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்திய அரசியல் சட்டவிதிகள் எல்லாவற்றையும் மீறியதின் விளைவாகத் தொடரும் மாநில அரசையும் அவர்கள் ஏற்கிறார்கள். ஊழல் தான் முதன்மைப் பிரச்சினை; கட்சி அரசியலின் தலையீடுகள் தான் அரசு அமைப்புகளின் வீழ்ச்சிக்குக்காரணம் எனச் சொல்லிவந்த பிராமணர்களும் பிராமணிய அறிவு வர்க்கமும் இப்போதைய அரசைக் கேள்வி கேட்காமல் நழுவிக்கொண்டே போகிறது. பழைய கணையாழி எழுத்தாளர்களாகவும் நவீன நாடகத்தோடு தொடர்பு கொண்டிருந்த அறிவு வர்க்கமாகவும் இருந்த பலரும் முகநூலில் பாரதிய ஜனதாவையும் அதன் தமிழ்நாட்டு முகமான அ இ அதிமுகவையும் வெளிப்படையாக ஆதரிக்கும் நபர்களாக வலம் வருகிறார்கள். வாக்களிப்பது ரகசியமான வினை என்னும் அடிப்படையைக் கூடக் கைவிட்டுவிட்டு நான் இவரை ஆதரிக்கிறேன் என்று எழுதுகிறார்கள்.

இந்த வீழ்ச்சி தனிநபர் வீழ்ச்சி அல்ல. ஓர் அறிவியக்கத்தின் வீழ்ச்சி.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை