: 7

உமாமோகனின் எரவாணத்துக்கனவுகள்


மொத்தத் தொகுப்புக்கும் பொருந்தும்விதமாகத் தலைப்பிட வேண்டுமென இப்போதெல்லாம் எந்தக் கவியும் நினைப்பதில்லை. தொகுப்பிலுள்ள கவிதைகளில் வித்தியாசமான படிமம் அல்லது உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட கவிதைத் தலைப்பைத் தொகுதியின் தலைப்பாக வைத்து விடுகிறார்கள். அந்த அளவில் மட்டுமே தொகுதியின் தலைப்புக்கான முக்கியத்துவம் இருக்கின்றது. தொடர்ச்சியாக ஒருவித மனநிலையில் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கும் பெருங்கவிகளின் தொகுதிகள் இந்தப் போக்கிலிருந்து விலகி நிற்கின்றன. அந்தக் கவிதைகளை எழுதிய மனநிலையின் பொதுக்குறியீடாக ஒரு சொல்லையோ -சொற்றொடரையோ தொகுப்பின் தலைப்பாக வைப்பதைப் பார்க்கலாம். தொடர்ச்சியாகக் கவிதைமனத்தைத் தக்கவைக்கும் உமாமோகனின் இந்தத் தொகுப்பு அதிலிருந்து விலகியிருக்கிறது.

உமா மோகனின் கனவு செருகிய எரவாணம் என்று தொகுப்பாக நிற்கும் தலைப்பில் ஒரு கவிதை இருக்கிறது.அந்தக் கவிதை நேரடியாக எரவானம் என்னும் இருப்பையும் இருப்பாக்க முடியாத கனவையும் பிணைத்துக் காட்டி ஒருவிதத் தொனியை உருவாக்கியிருக்கிறது.

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்குக் கூட கசப்பேறிய பின்னும்
****
கனவுகளைச் செருகிவைத்த எரவாணம்
யானை விரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்

திரளும் கண்ணீரைத் 
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர் வார்த்த முல்லையின் நிறம்

அப்படித்தான் இருக்கும்.

பழமுதிரிலோ உழவர் சந்தையிலோ
பேரம் பேசியோ பேசாமலோ
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம்
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின் 
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப் பிய்த்த சுரைப்பிச்சின்
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை

அந்தப் புறங்கையில் பாருங்கள் 
அதே பனித்துளி

இந்தக் கவிதை உருவாக்கும் தொனியையும் காட்சிப்படிமங்களையும் கொண்ட சிறுகவிதைகள் சிலவற்றையும் இந்தத் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. கனவு காணவிரும்பும் நினைவுகளைக் கவிதையாக்கித் தனது எரவானத்தில் சொருகி வைத்திருக்கிறார். கொண்டையில் நிரப்பிக் கொள்ளும் மல்லிகைச் சரத்தைத் தூக்கிப் போட மனம் இல்லாமல் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் காலையிலோ மாலையிலோ இன்னொருவரைக் கொண்டு தூக்கிக் கூடையில் போடும் ஒரு பெண்ணின் மனநிலைபோல எரவானமும் நினைவுகளும் பல கவிதைகளில் அந்தச் சொற்களாக இல்லாமல் அதே படிமங்களை உருவாக்குகின்றன. அப்படியான கவிதையாக இந்தச் சிறிய கவிதைகளையும் வாசிக்கலாம்.
1. நுனிக்காலில் நின்றாடும் பாப்புக்குட்டி
================================
புதிய பொம்மைக் காட்டும்
அப்பாவின் உயரத்தை அண்ணாந்து
வியக்கும் குதூகலமும் பொலிய
நுனிக்காலில் நின்றாடுவாள் 
பாப்புக்குட்டி
நானோ ஒருநாள் போல 
பால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன்
கதிர்பார்த்து 
--------------------------------- 
2. திடீரென வந்த மழை
திடீரென வந்துவிட்டதாகவே நம்புவோம்
இல்லையெனில் 
பொட்டலத்துக்குள்ளிருந்து
வெளியே குதித்துவிடும்
மனசைக் கட்டிவைக்க
கையாலாகா துக்கம் வேறு சேர்ந்துகொள்ளும்
-தலைப்பில்லாதவொரு கவிதை

3.ரோஸ் கவுன்
================
ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன்
குழம்பு சுடவைத்து 
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும்
கனவில் நினைவு வரும்
ஒரு காலத்தில் 
அதே ரோஸ் இல்லையென்றாலும் 
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத் துணி
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே
நினைவு வந்தது.

எரவானம்- கனவு -நினைவுகளின் விவரிப்பு என்னும் மனநிலையை எழுதிக்காட்டும் நீள் கவிதைகள் பலவும் இத்தொகுப்பில் உள்ளன. விடைபெறுவதும் புதுப்பிறப்பும்,நதியில் தேயும் கூழாங்கல்,நேற்று என்றொரு நாள்,நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி முதலான கவிதைகள் எரவானப் படிமத்தைப் புதுப்பிக்கின்றன. இந்தத் தொனியல்லாமல் சமூக நடப்புகளையும் சில நிகழ்காலக் கேள்விகளையும் எழுப்பும் கவிதைகளையும் தொகுப்பில் வாசிக்க விரும்புபவர்களையும் ஏமாற்றவில்லை உமா மோகன்.

Image may contain: one or more people and text


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை